சி.ஆர்.பி.எப்., பார்லி., படை வி.ஐ.பி., பிரிவுடன் இணைப்பு
சி.ஆர்.பி.எப்., பார்லி., படை வி.ஐ.பி., பிரிவுடன் இணைப்பு
ADDED : ஜன 16, 2025 06:08 AM

புதுடில்லி: பார்லிமென்ட் பாதுகாப்பில் இருந்து கடந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்ட சி.ஆர்.பி.எப்., படைப்பிரிவு வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டது.
பார்லி., உள்ளேயும், வெளியேயும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பார்லி., பாதுகாப்பு பிரிவு பாதுகாப்பு அளித்து வந்தது. 2023 டிச., 13ல், புதிய பார்லி.,யில் உள்ள லோக்சபாவில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இருவர், வண்ண புகைக்குண்டுகளை வீசி முழக்கங்களை எழுப்பினர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், லோக்சபாவில் பாதுகாப்பு மீறல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2024 மே மாதம் பார்லி., பாதுகாப்பில் இருந்து, சி.ஆர்.பி.எப்., படை விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பார்லி.,யில் பாதுகாப்பு வழங்கும் பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., படையின் பார்லி., பாதுகாப்பு பிரிவை, அதன், வி.ஐ.பி., பிரிவில் முறைப்படி இணைத்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, 1,400 வீரர்கள் வி.ஐ.பி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், வி.ஐ.பி., பிரிவில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை, 8,000 ஆக அதிகரித்துள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, காங்., பார்லி., குழு தலைவர் சோனியா, அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது சகோதரியும், எம்.பி.,யுமான பிரியங்கா உள்ளிட்ட 200 பேருக்கு, சி.ஆர்.பி.எப்., படையின் வி.ஐ.பி., பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறது.