போலீஸ் ஸ்டேஷனில் கொடுமை; காதலியுடன் சென்ற ராணுவ வீரருக்கு அதிர்ச்சி!
போலீஸ் ஸ்டேஷனில் கொடுமை; காதலியுடன் சென்ற ராணுவ வீரருக்கு அதிர்ச்சி!
UPDATED : செப் 20, 2024 08:22 AM
ADDED : செப் 20, 2024 07:25 AM

புவனேஸ்வர்: ஒடிசா போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ வீரரின் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15ம் தேதி ராணுவ வீரர் ஒருவர் தனது காதலியின் உணவகத்தை நள்ளிரவு 1 மணியளவில் மூடி விட்டு கிளம்பும் போது, சில மர்ம நபர்கள் அவர்களை தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்க பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர்.
அங்கு புகாரைப் பெற இருந்த பெண் காவலர், ராணுவ வீரர் மற்றும் அவரது காதலியை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். பின்னர், ராணுவ வீரரை சிறைபிடித்த காவலர்கள், அவரது காதலியை இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் இயக்குநர் ஒய்.பி., குரானியா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, டி.எஸ்.பி., நரேந்திர குமார் பெஹேரா தலைமையிலான 5 நபர் குழு, பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இளம்பெண் பாலியல் தொந்தரவு சம்பவத்தில் ஐ.ஐ.சி., தினகுருஷ்னா மிஸ்ரா, எஸ்.ஐ., பைசாலினி பாண்டா, ஏ.எஸ்.பி.,க்கள் சலிலமயி சாஹு, சகாரிகா ராத் மற்றும் கான்ஸ்டபிள் பலராம் ஹண்டா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.