ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளம்: மாயமான ரூ.368 கோடி
ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளம்: மாயமான ரூ.368 கோடி
UPDATED : ஜூலை 20, 2025 10:24 PM
ADDED : ஜூலை 20, 2025 10:01 PM

புதுடில்லி: பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை பயன்படுத்தி, இந்தியாவின் முன்னணி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸை(CoinDCX) ஹேக்கர்கள் முடக்கினர். இதனால் 44 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் ரூ.368 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாடிக்கையாளர்களின் சொத்துகள் பாதுகாப்பாக உள்ளது. இழப்புகள் உரிய முறையில் சரி செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது சொத்துகளை சேமிக்க பயன்படுத்தப்படும் வாலட்கள் பாதிக்கப்படவில்லை. அதிநவீன சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹேக் செய்யப்பட்டது. நிறுவனத்தின் கருவூல நிதி மூலதனம் ஆரோக்கியமாக உள்ளதால் இழப்பை ஈடு செய்ய முடியும் எனத்தெரிவித்துள்ளார்.
மேலும், உங்கள் முதலீடுகள் அனைத்தையும் அச்சத்தில் விற்பனை செய்ய வேண்டாம். இது குறைந்த விலை மற்றும் தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்தும், சந்தைகள் இயல்புநிலைக்கு வரட்டும். அமைதியாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.
இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேணடியதுஇல்லை. ஹேக் செய்யப்பட்ட நிதியை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம். எங்களின் குழு முழுமையான விவரங்களை பெறுவதற்கு உரிய வேலைகளை செய்து வருகிறது. இவை கிடைத்தஉடன் அனைத்து தகவல்களும் பகிரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் உள்பாதுகாப்பு குழு, ஆபரேஷன்ஸ் குழு, சைபர் பாதுகாப்பு குழுவினர் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். சர்வர் மற்றும் அது தொடர்பான தளங்களில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன. ஹேக்கிங் செய்யப்பட்ட பணம் எங்கே போனது போன்றவை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
மேலும், தங்களது தளங்களில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிந்து சொல்பவர்களுக்கு பரிசு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.