ADDED : ஜன 02, 2025 09:19 PM

புதுடில்லி: கலாசார ஒற்றுமையே இந்தியாவின் அடையாளம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
டில்லியில் 'ஜே&கே மற்றும் லடாக் த்ரூ தி ஏஜஸ்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவின் அடையாளமே கலாசார ஒற்றுமை தான். இந்தியா ஒருபோதும் ஒன்றுபடவில்லை என்று விவரிக்கும் காலனித்துவ கட்டுக்கதைகளை மறுக்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான கலாசார ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் வரலாறு மற்றும் சாதனைகளையும் பார்த்தால் தெரியும்.
இந்தியாவின் ஆயிரம் காலத்து வரலாற்றின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும். காலனித்துவ சக்திகள், இந்தியாவின் உண்மையான வரலாற்று விவரிப்புகளை அழிக்க முயன்றனர். பிரிக்கப்படாத இந்தியா பற்றிய கட்டுக்கதைகளை பரப்புகின்றனர். உலக நாகரிகங்களுக்கு இந்தியாவின் வளமான கடந்தகால பங்களிப்புகளை இது போன்ற கதைகள் குறைந்த மதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அதையும் சிலர் அதை ஏற்றுக்கொண்டனர்.
மற்ற நாடுகளைப் போலல்லாமல், இந்தியா புவியியல் அல்லது அரசியல் எல்லைகளைக் காட்டிலும் அதன் கலாசார தொலைதுார பார்வை மூலம் தன்னை வரையறுக்கிறது. காந்தாரம் முதல் ஒடிசா வரையிலும், வங்கம் முதல் அசாம் வரையிலும் பரந்து விரிந்திருக்கும் கலாசார விழுமியங்களின் அடிப்படையில் இந்தியாவின் ஒற்றுமை நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.

