ADDED : பிப் 18, 2025 05:52 AM

பன்னர் கட்டா என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, அங்கு இருக்கும் வனவிலங்கு பூங்கா தான். ஆனால், பன்னர் கட்டா பூங்காவை சுற்றி ஏராளமான கோவில்களும் உள்ளன. இது பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. என்னென்ன கோவில்கள் உள்ளன என்பது பற்றி பார்க்கலாம்.
பன்னர் கட்டா பூங்காவை அடைவதற்கு சற்று முன்பு வலது பக்கம் ஒரு குறுகிய சாலை செல்கிறது. இந்த சாலை வழியே சென்றால் அங்கு 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகிய சம்பகதாமா கோவில் உள்ளது. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது. கோவிலில் கடவுள் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் உள்ளன.
இந்த கோவிலுக்கு பின்பக்கம் நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரம் மலையில் ஏறி பயணம் செய்தால், சுவர்ணமுகி கோவில் உள்ளது.
கோவிலுக்கு அருகில் குளம் உள்ளது. இந்த குளத்தில் புனித நீராடினால், தீராத நோயும் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். சுவர்ணமுகி கோவிலில் தெய்வத்தை வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்.
ஆனால் இந்த கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையின் அனுமதி தேவை. கரடு முரடான சாலைகள் வழியாகத்தான் கோவிலை சென்றடைய முடியும்.
இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதியில் தான் ராமர், சீதா, லட்சுமணன் வனவாசம் சென்றபோது தங்கி இருந்தனர் என்றும் புராண வரலாறுகள் கூறுகின்றன.
பக்தர்கள் கொண்டு வரும் கற்களை பயன்படுத்தி சிறிய வீடுகள் போல கட்டுகின்றனர். அப்படி செய்தால் மனதில் நினைக்கும் எண்ணங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
- நமது நிருபர் -

