வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை சிக்கலானது; காங் எம்பி சசி தரூர் வருத்தம்
வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை சிக்கலானது; காங் எம்பி சசி தரூர் வருத்தம்
ADDED : டிச 19, 2025 10:04 PM

புதுடில்லி: வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை சிக்கலானது. நாங்கள் கவலைப்படுகிறோம் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இது தொடர்பாக நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது: வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை சிக்கலானது. நாங்கள் கவலைப்படுகிறோம். வங்கதேசத்தில் பொறுப்பற்ற சக்திகள் மிக மிக முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து ஏழு மாநிலங்களைப் பிரிக்கப் போவதாக ஒரு மாணவர் தலைவர் சமீபத்தில் கூறியதை நீங்கள் பார்த்தீர்கள். இப்படிப் பேச அவர் யார்?
இதுபோன்ற சக்திகள் தளர்ந்து போகின்றன என்பதை நாங்கள் நன்கு அறிவோம். வங்கதேசத்திற்குள் இந்தியாவின் அடிப்படை நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். வங்கதேசத்தில் அமைதி மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பதையும் நாங்கள் உறுதிசெய்வோம். இவ்வாறு சசி தரூர் கூறினார்.

