ADDED : நவ 08, 2024 10:59 PM

இனிப்பு என்றால், யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால், இனிப்பு பண்டம் எப்படி செய்வது என, பலருக்கும் தெரிவதில்லை; நேரமும் இருப்பதில்லை. குறைந்த நேரத்தில், விதவிதமான இனிப்புகளை தயாரித்து சுவைக்கலாம்.
கோதுமை லட்டு
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் துாள் - 1 ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
உடைத்த கோதுமையை நன்றாக கழுவி, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அடி கனமான வாணலியில் சர்க்கரையை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை கரைந்ததும், வேக வைத்துள்ள கோதுமை, ஏலக்காய் துாள் சேர்த்து, மிதமான தீயில் வைக்கவும்.
நன்றாக வெந்தபின் நெய் சேர்த்து கிளறுங்கள். ஆறிய பின் உள்ளங்கையில் நெய் தடவி கொண்டு, மாவு கலவையை சிறு, சிறு உருண்டைகள் செய்யுங்கள். கோதுமை லட்டு சுவையானது மட்டுமல்ல. ஊட்டச்சத்தானது. அவ்வப்போது சிறு குழந்தைகளுக்கு செய்து தரலாம்.
மில்க் பர்பி
தேவையான பொருட்கள்
மில்க் பவுடர் - 1 கப்
மைதா - அரை கப்
பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப்
பால் - கால் கப்
முந்திரி, பாதாம் - 15 முதல் 20
நெய் - அரை கப்
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது நெய் விட்டு மைதாவை போட்டு வறுத்து கொள்ளவும். அதன்பின் மைதாவில், பால் பவுடர், சர்க்கரை, பால், முந்திரி, பாதாமை போட்டு நன்றாக கிளறவும்.
கலவை நன்றாக வெந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விடவும். விருப்பமான வடிவில் வெட்டி கொள்ளவும். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர்.
பிரட் பேடா
தேவையான பொருட்கள்:
பிரட் துாள் - ஒரு கப்
பால் பவுடர் - இரண்டு ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
முந்திரி பருப்பு - 8 முதல் 10
நெய் - இரண்டு ஸ்பூன்
செய்முறை:
பிரட் துாளை நெய்யில் வறுத்து, பால் பவுடரை சேர்ந்து பிசைந்து வைத்து கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
இதில் பால் பொடி கலவையை சேர்த்து மிதமான தீயில் வையுங்கள். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வந்த பின், நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும். பேடா வடிவில் வெட்டி கொள்ளவும். மிகவும் சுவையாக இருக்கும்.
- நமது நிருபர் -