ADDED : மார் 29, 2025 03:37 AM

பெலகாவி : கர்நாடகாவில், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்து, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், கானாபூர் தாலுகாவை சேர்ந்த வயதான தம்பதி சான்டன் நசரேத், 82, பிளாவியா, 79. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இவர்கள் இருவரும் வீட்டில் நேற்று கத்தியால் கையை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை துவக்கினர்.
கணவன், மனைவி இருவரும் கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இறப்பதற்கு முன் அவர்கள்எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன்பு, வயதான தம்பதிக்கு மொபைல் போனில் பேசிய நபர், தன்னை டில்லியில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி சுமித் பிராரி என, அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
தம்பதியின் மொபைல் போன் எண்ணிலிருந்து சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளதாக மிரட்டி உள்ளார். இதனால், தம்பதி அச்சம் அடைந்தனர். இச்சமயத்தில் அனில் யாதவ் எனும் மற்றொரு நபர் தொடர்பு கொண்டு, இதே விஷயத்தை பற்றி கூறி, பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால், மனமுடைந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர் என தெரிய வந்துள்ளது.
பெலகாவி எஸ்.பி., பீமா சங்கர் கூறுகையில், ''வயதான தம்பதியிடம், சைபர் குற்றவாளிகள் மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்து இருக்கலாம்,'' என்றார்.