ADDED : அக் 25, 2024 03:02 AM

கோல்கட்டா,'டானா' புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூறைக்காற்று
வங்கக் கடலில் உருவான டானா புயல், தீவிர புயலாக வலுப்பெற்றதை அடுத்து மேற்கு வங்கம், ஒடிசாவில் நேற்று மழை கொட்டியது. ஒடிசாவின் லசோர், பத்ரக், பிதர்கானியா, புரி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக பல பகுதிகளில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் ஒடிசாவின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.
குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இங்குள்ள பிடர்கனிகா தேசிய பூங்கா - தாம்ரா துறைமுகம் இடையே புயல் கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் நேற்று நடந்த அவசரக் கூட்டத்தில், 'பூஜ்ய உயிரிழப்பு' என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
புயல் காரணமாக, ஏற்கனவே 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மேலும் மூன்று லட்சம் பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புயல் கரையை கடக்கும் போது, 120 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஒடிசாவில் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புவனேஸ்வர் விமான நிலையத்தில் நேற்று மாலை 5:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் கடற்கரையோரம் வசிக்கும் ஐந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கோல்கட்டா தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
புயல் காரணமாக கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து செல்லும் விமானங்களின் சேவைகள், நேற்று மாலை 6:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை நிறுத்தப்பட்டன.
புறநகர் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.