வங்க கடலில் உருவானது 'மிக்ஜாம்' புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவானது 'மிக்ஜாம்' புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : நவ 28, 2023 06:46 AM

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது; இது, புயலாக மாற உள்ளது. அதற்கு, 'மிக்ஜாம்' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல், மூன்று புயல்கள் உருவாகியுள்ளன. முதலில் உருவான தேஜ் புயல் ஓமனிலும், அடுத்து வந்த ஹாமூன் மற்றும் மிதிலி புயல்கள், வங்க தேசத்திலும் கரை கடந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, இந்த பருவ காலத்தில் இதுவரை புயல் தாக்குதல்கள் ஏதும் இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து, நீராதாரங்கள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்க கடலின் தென் கிழக்கில், 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின், 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்க கடலின் தென்கிழக்கில் புயலாக வலுப்பெறும். இதனால், அந்தமானின் தெற்கு, தென் கிழக்கு பகுதிகளில், வடக்கு கடல் பகுதிகள் மற்றும் வங்க கடலின் தென்கிழக்கு, தென் மேற்கு பகுதிகளில், வரும் 1ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு, 1ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது; 80க்கும் மேற்பட்ட இடங்களில், ஒன்று முதல், 10 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு குறி?
காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் நகரும் வேகம், திசை ஆகியவற்றை, சென்னை, விசாகப்பட்டினம், கோல்கட்டா, புதுச்சேரி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள, 'ரேடார்' வாயிலாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, டிச., 1ம் தேதிக்கு பின், புயலாக வலுப்பெறும் என்று தெரிகிறது. இந்த புயலுக்கு, மியான்மர் வழங்கியுள்ள, 'மிக்ஜாம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புயல் வடமேற்கில் நகரும்போது, நாகப்பட்டினம் முதல் ஒடிசாவின் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதிகளில், கன மழையுடன் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது.
அதேபோல, நாகை முதல் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதியில், ஒரு இடத்தில் கரை கடக்கும் வாய்ப்புள்ளது. டிச., 2ம் தேதி தான் புயலின் நகர்வு, கரை கடக்கும் நிலவரம் தெரியவரும் என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மாநிலம் முழுதும் பெரும்பாலான மாவட்டங்களில், டிச., 3 வரை மிதமான மழை பெய்யும்.

