ரூ.500க்கு சிலிண்டர்; இலவச மின்சாரம் டில்லி தேர்தலுக்கு காங்கிரஸ் வாக்குறுதி
ரூ.500க்கு சிலிண்டர்; இலவச மின்சாரம் டில்லி தேர்தலுக்கு காங்கிரஸ் வாக்குறுதி
ADDED : ஜன 17, 2025 02:09 AM
புதுடில்லி, டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், 500 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர், மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. மொத்தம் 70 தொகுதிகளை உடைய டில்லி சட்டசபைக்கு பிப்., 5ல் ஒரே கட்டமாக தேர்தலும், பிப்., 8ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
இதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் ரேவந்த் ரெட்டி பேசுகையில், “டில்லி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 500 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் வழங்கப்படும்,” என அறிவித்தார்.
முன்னதாக, டில்லி மாநில பெண்களுக்கு மாதம் 2,500 உதவித் தொகை, குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய்க்கு இலவச மருத்துவக் காப்பீடு ஆகிய இரண்டு வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியிருந்தது.
“இந்த ஐந்து வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் நிறைவேற்றும்,” என, ரேவந்த் ரெட்டி உறுதியளித்தார்.