தண்டவாளத்தில் சிலிண்டர், டெட்டனேட்டர் வட மாநிலங்களில் ரயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில் சிலிண்டர், டெட்டனேட்டர் வட மாநிலங்களில் ரயிலை கவிழ்க்க சதி
ADDED : செப் 23, 2024 12:59 AM

புதுடில்லி: உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தண்டவாளங்களில் சிலிண்டர், டெட்டனேட்டர்களை வைத்து ரயில்களை கவிழ்க்க மர்ம நபர்கள் தீட்டிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் இருந்து கர்நாடகாவுக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று நேற்று புறப்பட்டது.
இது, மத்திய பிரதேசத்தின் புர்பந்தர் மாவட்டத்தின் நேபா நகர் பகுதி சக்படா ரயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள் திடீரென வெடித்தன.
சத்தம் கேட்டு ரயிலை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி பார்த்தபோது, ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் சதி செய்திருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து, ரயில் டிரைவர் அருகேயுள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக நக்சல் எதிர்ப்பு படையினர், தேசிய புலனாய்வு அமைப்பு, ரயில்வே மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் கிடந்த டெட்டனேட்டர்கள் மூடுபனி காலத்தில் சத்தம் எழுப்புவதற்காக ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்துபவை என்பதும், அந்த டெட்டனேட்டர்களை பயன்படுத்தி ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என விசாரணை நடக்கிறது.
இதேபோல் உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்திலும் ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு நேற்று காலை சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
பிரம்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சிலிண்டர் கிடந்ததால், டிரைவர் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.
கீழே இறங்கி வந்து பார்த்தபோது, 5 கிலோ எடையுள்ள காலி சிலிண்டர் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.