ADDED : ஜூலை 06, 2025 11:35 PM
தரம்சாலா: புத்த மதத் தலைவர் தலாய் லாமா, நேற்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி நம் நாட்டின் ஹிமாச்சலின் தரம்சாலாவில் வசித்து வருகிறார்.
தன் மறைவுக்கு பின், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதை கண்டித்த மத்திய அரசு, புதிய தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், தரம்சாலாவில் உள்ள தலாய் லாமா கோவிலில், புத்த மதத் தலைவர் தலாய் லாமா, 90வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜிவ் ரஞ்சன் சிங், அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு, பள்ளி குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரி உள்ளிட்டவை நடந்தன.
இதில் தலாய் லாமா பேசுகையில், ''மக்களின் அன்பு தான், அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் சேவை செய்ய என்னை துாண்டுகிறது,'' என்றார்.
தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தைவான் அதிபர் லாய் சிங்-டே உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

