தலித் சமூகத்தினர் வீடுகள் எரிப்பு: பீஹாரில் பதற்றம்
தலித் சமூகத்தினர் வீடுகள் எரிப்பு: பீஹாரில் பதற்றம்
ADDED : செப் 20, 2024 12:37 AM

நவாடா: பீஹாரில் நில தகராறில் தலித் சமூகத்தினரின் 21 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், மற்றொரு தலித் பிரிவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீஹாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, நவாடா மாவட்டத்தில் உள்ள மாஞ்சி தோலா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மஞ்சி, ரவிதாஸ் பிரிவினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், இதே பகுதியில் வசித்து வரும் பஸ்வான் என்ற தலித் சமூக பிரிவினருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, மஞ்சி மற்றும் ரவிதாஸ் பிரிவினரின் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேற்று நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது. இதில், 21 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விசாரணை நடத்திய போலீசார், 15 பேரை கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்ய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ வைப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் நிதீஷ்குமார், “சட்டத்தை கையிலெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்,” என கூறியுள்ளார். உண்மை கண்டறியும் குழுவை, சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தும்படியும் அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தீ வைப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.