ADDED : ஜன 10, 2025 07:18 AM

தார்வாட்: ஹூப்பள்ளி, தார்வாட் பகுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
கடந்த டிசம்பரில் நடந்த லோக்சபா கூட்டத்தொடரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக, அவரை கண்டித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.
நேற்று, ஹூப்பள்ளி, தார்வாட் இடங்களில் தலித் அமைப்பின் சார்பில், பந்திற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
நேற்று அதிகாலையில் தார்வாட்டில் உள்ள ஜூப்ளி சதுக்கத்தில் போராட்டத்தை துவக்கினர்.
டயர்களை சாலையில் போட்டு எரித்தனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஹூப்பள்ளி, சென்னம்மா பகுதியில் உள்ள கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டன. சில இடங்களில் கடைகளை மூடும்படி, போராட்டக்காரர்கள் நிர்பந்தம் செய்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சில தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கூறுகையில், 'எங்கள் போராட்டத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றனர்.
தார்வாட் போலீஸ் கமிஷனர் என்.சசிகுமார் கூறுகையில், ''பந்தை முன்னிட்டு, 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பந்திற்கு எந்த கட்டாயமும் இல்லை. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
''சென்னம்மா சதுக்கத்தில் போராட்டம் நடத்திய போது, சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், அங்கு தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது,'' என்றார்.

