ADDED : அக் 25, 2024 07:54 AM

தங்கவயல்: அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கம் சார்பில் நவம்பர் 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தாவணகெரேயில் மாநாடு நடக்கிறது. இம்மாநாடு குறித்து தங்கவயலில் நேற்று பிரசார கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ஜனார்த்தன் பேசுகையில், ''இந்த அமைப்பு உயர் ஜாதி வகுப்பினருக்கு எதிரான இயக்கம் இல்லை. தாழ்த்தப்பட்ட இனத்தவரின் உரிமைகளை பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
''அனைத்து அரசியல் கட்சிகளிலும் எஸ்.சி., - எஸ்.டி., அமைப்புகள் உள்ளது போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அகில இந்திய அளவில் புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மாநாடு தாவணகெரேயில் நவம்பர் 8, 9ல் நடக்கிறது. இது குறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்யப்படுகிறது,'' என்றார்.
வக்கீல் ஜோதிபாசு பேசுகையில், ''கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை கோருவதற்காகவே இந்த இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் ஓட்டுகளை குறி வைப்பதை எதிர்க்க இந்த இயக்கம் அவசியம் தேவைப்படுகிறது,'' என்றார்.
ஹாசன் தர்மராஜ், பங்கார்பேட்டை வினோத் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய அமைப்பின் தங்கவயல் தலைவராக ஸ்ரீகுமார், துணைத் தலைவராக ராஜன், செயலராக டேக்கல் அம்பரிஷ், பொருளாளராக புஷ்பராஜ் மற்றும் செயற்குழுவுக்கு 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

