பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசிய தலித் பெண் சடலமாக மீட்பு
பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசிய தலித் பெண் சடலமாக மீட்பு
ADDED : நவ 21, 2024 12:55 AM
மெய்ன்புரி,
உத்தரபிரதேசத்தில், படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
உ.பி.,யின் மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் பகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் கஞ்சாரா ஆற்றுப்பாலத்தின் அருகே சாக்கு மூட்டையில் சடலம் கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து வந்த போலீசார் சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது அதில் இளம் பெண் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டது. விசாரணையில் அது மாயமான தலித் இளம்பெண் என்பதும், அவரை பலாத்காரம் செய்து மர்மநபர்கள் கொலை செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாவது:
கர்ஹால் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில் நடந்த மெய்ன்புரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதனால் காலியான கர்ஹால் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
சமாஜ்வாதியின் கோட்டையான கர்ஹாலில் அகிலேஷ் யாதவின் மருமகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். இந்த நிலையில் கர்ஹாலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளருக்கு அந்த இளம்பெண் ஓட்டுபோடப்போவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சமாஜ்வாதி பிரமுகர் பிரசாந்த், தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட மறுத்த அந்த இளம்பெண்ணை மோட்டார் பைக்கில் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் நிர்வாணமாக சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

