ஆவாரம் பூ வடிவில் வந்தது ஆபத்து : வேகமாக பரவும் சீமை கொன்றை தாவரம்!
ஆவாரம் பூ வடிவில் வந்தது ஆபத்து : வேகமாக பரவும் சீமை கொன்றை தாவரம்!
ADDED : ஜன 20, 2024 10:50 PM

தமிழக வனப்பகுதிகளில், ஆவாரம் பூ போன்ற தோற்றத்தில் காணப்படும், 'சென்னா ஸ்பெக்டாபிலிஸ்' என்ற, சீமை கொன்றை வகை களைச் செடிகளின் வேகமான பரவலால், முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட புலிகள் காப்பகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, வன உயிரியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்து
உள்ளனர். தமிழகத்தில் சீமை கருவேலம் உள்ளிட்ட, களை தாவரங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, களை தாவர தடுப்பு
நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், வனத்துறையால் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படாத சில புதிய வகை களை தாவரங்கள் வனப் பகுதிகளில் வேகமாக பரவுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில், புதிய வகை களை தாவரங்கள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆவாரம் பூ தோற்றம்
தொலைவில் இருந்து பார்த்தால், ஆவாரம் பூ போன்று காட்சியளிக்கும், 'சென்னா ஸ்பெக்டாபிலிஸ்' என்று, ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட புதிய களை தாவரம், வனப்பகுதிகளுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. தமிழில், 'சீமை கொன்றை' என்று, இத்தாவரம் குறிப்பிடப்படுகிறது.துாய மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் இதன் மலர்கள், ஆவாரம் பூ போன்று இருப்பதால், வனத் துறை பணியாளர்களே, இதை இன்னும் களை தாவரமாக வகைப்படுத்துவதில் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக இத்தாவரம் பெருகி வருகிறது.
பாதிப்பு என்ன?
இதுகுறித்து, கேரளா பரம்பிக்குளம் புலிகள் காப்பக வன உயிரின கண்காணிப்பு வல்லுனர் எம்.பாலசுப்ரமணியம் கூறியதாவது:தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் தான், சென்னா ஸ்பெக்டாபிலிஸ் தாவரம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார தாவரம் என்ற அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குள் வந்த இத்தாவரம்,
தற்போது வன உயிர் சூழலுக்கு ஆபத்தாக வளர்ந்து உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் வயநாடு வன உயிரின காப்பகத்தில், இதன் ஆபத்துகள் தெரியவந்தன.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா, கர்நாடகா, தமிழக வனப் பகுதிகளில், இத்தாவரம் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், மேகமலை புலிகள் காப்பகங்கள், கோவை வன கோட்டம் என, பல்வேறு இடங்களில் இதன் பரப்பளவு வெகுவாக அதிகரித்து வருகிறது.
இது, வளரும் இடத்தில், வேறு எந்த தாவர இனங்களும் வளராது. இதன் கீழ் நிழலுக்காக கூட வன உயிரினங்கள் ஒதுங்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. விதைகள் வாயிலாக, வேகமாக பரவும் இத்தாவரத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பது மிக பெரிய சவாலாக உள்ளது. ஒரு அங்குல வேர் துண்டு இருந்தால் கூட, அதில் இருந்து வேகமாக வளர்ந்து விடும். இதை ஒழிக்க, அவசர நட
வடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த 15 ஆண்டுகளில் புலிகள் காப்பகங்கள் அழியும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அழிக்கும் பணியில் தமிழகம் தீவிரம்
தமிழக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் அன்னிய களைச் செடிகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. உண்ணிச் செடி, சீமை கருவேலம், சிகை மரம், ஆயப்பனை, பார்த்தீனியம் ஆகிய களைச் செடிகளுடன், சென்னா ஸ்பெக்டாபிலிஸ் எனப்படும் சீமை கொன்றை தாவரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
கடந்த நிதி ஆண்டில், 7,337.27 ஏக்கர் பரப்பளவில் களைச் செடிகள் அகற்றப்பட்டன. இதில், 756 ஏக்கர் பரப்பளவுக்கு சீமை கொன்றை செடிகள் அகற்றப்பட்டன. நீலகிரி உயிர்கோள பகுதியில், சீமை கொன்றை செடிகளை அகற்ற, முதுமலை புலிகள் காப்பகத்தில், 143 ஏக்கர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 1,593 ஏக்கர் பரப்பளவு பகுதிகள், தமிழக காகித ஆலைக்கு ஒதுக்கி அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.பிற புலிகள் காப்பகங்களிலும் சீமை கொன்றை செடிகளை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

