ஆபத்தான 19 பள்ளி இடிப்பு தாமதம்! ஓட்டுச்சாவடியாக மாறியதால் அதிகாரிகள் இழுபறி
ஆபத்தான 19 பள்ளி இடிப்பு தாமதம்! ஓட்டுச்சாவடியாக மாறியதால் அதிகாரிகள் இழுபறி
ADDED : பிப் 04, 2024 11:03 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளதால், ஆபத்தான நிலையில் உள்ள பெங்களூரு மாநகராட்சியின் 19 பள்ளி கட்டடங்களை இடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சார்பில் 163 பள்ளி, கல்லுாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பரில், சிவாஜி நகர் பாரதி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மழலையர் பள்ளி கட்டடம், இரவில் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் கட்டடம் இடிந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் விழித்து கொண்ட பெங்களூரு மாநகராட்சி, அனைத்து பள்ளி, கல்லுாரி கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
கம்பிகள்
பொறியாளர்கள் சமர்ப்பித்திருந்த அறிக்கை:
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் 12; மேற்கு மண்டலத்தில் ஆறு; தெற்கு மண்டலத்தில் ஒன்று என 19 பள்ளி கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. 73 பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் பாதுகாப்பாக உள்ளன.
67 பள்ளி, கல்லுாரி கட்டடங்களின் சுவர்களில் விரிசலும்; மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே அதை சீரமைக்க வேண்டும். அங்குள்ள மாணவர்களை உடனடியாக வேறு கட்டடங்களுக்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் அசம்பாவிதம் நடக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. 13 கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பள்ளி கட்டடங்களில் ஓட்டுச்சாவடிகள் இருப்பதால், இப்போதைக்கு கட்டடத்தை காலி செய்யும் பணி நடக்கவில்லை.
அதே வேளையில், ஆபத்தான கட்டடம் என்று குறிப்பிட்ட நிலையில், இன்னும் ஐந்து பள்ளிகளின் மாணவர்கள் அதே கட்டடத்தில் பாடம் படித்து வருகின்றனர்.
வேறு இடம்
அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
பள்ளியை மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள், வேறு கட்டடங்களுக்கு மாற்றப்படுவர்.
மாநகராட்சி திட்டப்பிரிவு மூலம், 37 பள்ளிகளில் 10 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 30 பள்ளிகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு, 40,000 ரூபாய் முதல் 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்களின் கல்வியில் எந்த இடையூறும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

