UPDATED : அக் 31, 2024 02:02 AM
ADDED : அக் 31, 2024 01:45 AM

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் இருந்த கன்னட நடிகர் தர்ஷனுக்கு, ஆறு வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன், 47. இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா, 34. இவருக்கு, தர்ஷனின் தீவிர ரசிகரான சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவர் ஆபாச குறுந்தகவல்களை தொடர்ந்து அனுப்பி வந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த தர்ஷன், பவித்ரா மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 17 பேர் சேர்ந்து, ரேணுகாசாமியை பெங்களூருக்கு காரில் கடத்தி வந்து, அடித்து கொலை செய்தனர். கடந்த ஜூன் 8ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேரும் கைது செய்யப்பட்டு, வெவ்வெறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. தர்ஷன், பவித்ரா ஜாமின் மனுக்கள், மாவட்ட நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன.
பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், முதுகுவலியால் அவதிப்பட்டார். அவருக்கு சிறையிலும், பல்லாரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உயர் சிகிச்சை பெற வேண்டி இருப்பதால், இடைக்கால ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் மனு தாக்கல் செய்தார்.
மருத்துவ அறிக்கையில், தர்ஷனுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்களும் குறிப்பிட்டிருந்தனர். ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, தர்ஷனுக்கு ஆறு வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். பவித்ராவுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.