பவித்ரா முதுகில் தட்டிக்கொடுத்த தர்ஷன் மீண்டும் மலருகிறது இருவருக்கும் நட்பு
பவித்ரா முதுகில் தட்டிக்கொடுத்த தர்ஷன் மீண்டும் மலருகிறது இருவருக்கும் நட்பு
ADDED : ஜன 10, 2025 11:21 PM

பெங்களூரு:ரேணுகாசாமி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது, பவித்ரா முதுகில் தர்ஷன் தட்டிக் கொடுத்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையில் மீண்டும் நட்பு மலரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக, கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆறு மாதங்களுக்கு பின், கடந்த மாதம் அனைவருக்கும் நிபந்தனை ஜாமின் கிடைத்தது. மாதந்தோறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி பெங்களூரு 57வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் 17 பேரும் ஆஜராகினர். விசாரணை அடுத்த மாதம் 23ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் வெளியே வந்தபோது, பவித்ராவும், தர்ஷனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
தர்ஷனிடம் சென்று உடல்நலம் விசாரித்த பவித்ரா கண்ணீர் விட்டார். அப்போது பவித்ராவின் முதுகில் தட்டிக் கொடுத்து தர்ஷன் ஆறுதல்படுத்தினார். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
சிறையில் இருந்தபோதும், வெளியே வந்த பின்னரும் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இதனால் அவர்களின் நட்பு முறிந்துவிட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில், 'எங்கள் நட்பு முறியவில்லை. மீண்டும் மலருகிறது' என்று சொல்வது போன்று, பவித்ரா, தர்ஷன் செயல் இருந்தது.