ADDED : ஜன 23, 2024 05:57 AM

துமகூரு: ராமர் பற்றி சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் ராஜண்ணா, நேற்று குடும்பத்துடன், ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
'அயோத்தி ராமர் சிலை, கூடாரத்தில் வைக்கப்படும் பொம்மை' என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகா கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா சர்ச்சையான கருத்து கூறி இருந்தார்.
இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சர் ராஜண்ணாவும், முதல்வர் சித்தராமையாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தின.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, துமகூரு மதுகிரியில் உள்ள ராமர் கோவிலில் அமைச்சர் ராஜண்ணா தனது குடும்பத்துடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதன்பின்னர் ராஜண்ணா கூறுகையில், ''எனது மனைவி சாந்தலாவின் வீட்டு தெய்வம் ஸ்ரீராமர். அதனால் இன்று ராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தோம். ராமரை கற்பனை உருவம் என்று சிலர் கூறலாம்.
''ஆனால், நான் ராமரை நம்புகிறேன். அவரை மனதார வணங்குகிறேன். ராமர் சிலை குறித்து நான் கூறிய சர்ச்சை கருத்தை சரி செய்வதற்காக, ராமர் கோவிலுக்கு வரவில்லை. உண்மையில் நான் ஒரு ராம பக்தன்,'' என்றார்.

