ரூ.22 ஆயிரம் கோடி வெளிநாட்டு சொத்துக்கள்; கண்டுபிடித்தது வருமான வரித்துறை!
ரூ.22 ஆயிரம் கோடி வெளிநாட்டு சொத்துக்கள்; கண்டுபிடித்தது வருமான வரித்துறை!
ADDED : பிப் 18, 2025 10:23 AM

புதுடில்லி: வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டாமல், வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்திருந்த 22,000 கோடி ரூபாய் மதிப்புக்கான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. வெளிநாட்டிலுள்ள சொத்துக்களை வருமானவரி தாக்கல் படிவத்தில் குறிப்பிட தவறும் நபருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் வருமானம் பெறும் ஒவ்வொரு நபரும் தங்களது வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். தற்போது, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதித்தால் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி தாக்கல் செய்யும் போது, வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்கள், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை சிலர் கணக்கில் காட்டுவதில்லை. இது சட்டப்படி குற்றம்.
வெளிநாட்டிலுள்ள சொத்துக்கள் மற்றும் வருமானத்தையும் தெளிவாக வருமான வரி தாக்கல் படிவத்தில் வெளிப்படுத்த வேண்டும். இதில் தவறு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வருமான வரித்துறை அபராதம் விதித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பல்வேறு வகைகளில் தகவல் திரட்டி வருகிறது.அந்த வகையில், இந்தியர்களுக்குச் சொந்தமான 22,000 கோடி ரூபாய் மதிப்புக்கான வெளிநாட்டு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதில் நிலங்கள், வெளிநாட்டு வருமானம் ஆகியவை அடங்கும். வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதும், அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு விட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை, வருமான வரி தாக்கல் செய்யும்போது தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இதனை மீறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

