ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
ADDED : செப் 20, 2024 05:34 PM

புதுடில்லி: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் தரவுகள், டெலிகிராம் சாட்பாட் மூலம் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெலிகிராம் செயலியை, உலகளவில் 90 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பல சாட்பாட்கள் உள்ளன. கடந்த மாதம் இதன் உரிமையாளர் பாவேல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது டெலிகிராம் செ யலி மீதான பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் விளங்குகிறது. இதன் சந்தை மதிப்பு 4 பில்லியன் டாலர் ஆகும். இந்த நிறுவனத்தில் லட்சகணக்கானோர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களின் விவரங்கள் டெலிகிராம் செயலியில் உள்ள சாட்பாட் மூலம் கசிந்துள்ளது. இது குறித்து அந்த சாட்பாட்டின் உரிமையாளர், ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சாட்பாட்டை பயன்படுத்தி சோதனை செய்ததில், பயனர்களின் பெயர், மொபைல் எண், முகவரி, வரி விவரம், அடையாள அட்டை , மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்ய முடிந்தது.
இது தொடர்பாக ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; தங்களது தகவல்களை சட்டவிரோதமாக சிலர் அணுக முடிந்ததாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், தகவல்கள் பெரியளவில் கசியவில்லை. நுகர்வோரின் முக்கியமான தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.