ADDED : ஜன 08, 2024 07:02 AM
மாண்டியா; கணவருடன் சேர்ந்து, தாயை கொலை செய்த மகள், போலீசாரிடம் சிக்கினார். தாயை புதைத்த இடத்தை நேற்று மாலை அடையாளம் காண்பித்தார்.
மாண்டியாவின், ஹெப்பகவாடி கிராமத்தை சேர்ந்தவர் சாரதம்மா, 50. இவரது மகள் அனுஷா, 25. கணவரை இழந்த சாரதம்மா, கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தினார்.
தன் ஒரே மகள் அனுஷாவை, மைசூரு அருகில் உள்ள ஹாரோஹள்ளியில் வசிக்கும் தேவராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
ஹெப்பகவாடியில் தனியாக வசிக்கும் சாரதம்மா, அவ்வப்போது ஹாரோஹள்ளிக்கு மகளை பார்க்க செல்வார். 2022 நவம்பரில் மகளை பார்க்க சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. தாய் வீட்டுக்கு வந்த அனுஷாவிடம், அக்கம், பக்கத்தினர் சாரதம்மா பற்றி விசாரித்த போது, காணாமல் போனதாக கூறினார்.
தாய் காணாமல் போன, ஆறேழு மாதங்களுக்கு பின், வருணா போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். போலீசாரும் ஹெப்பகவாடி மற்றும் ஹாரோஹள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அனுஷா, அவரது கணவர் தேவராஜும், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் தீவிரமாக விசாரித்த போது, சாரதம்மா கொலை விஷயம் அம்பலத்துக்கு வந்தது.
சாரதம்மா மகள் அனுஷா வீட்டுக்கு சென்றிருந்த போது, ஏதோ காரணத்துக்காக மகளும், மருமகனும் சண்டை போட்டுள்ளனர். தடுக்க சென்ற சாரதம்மாவை கீழே தள்ளியதில், அவர் காயமடைந்து உயிரிழந்தார். பயந்த மகளும், மருமகனும் உடலை ஹெப்பகோடிக்கு கொண்டு சென்று, மயானத்தில் திருட்டுத்தனமாக புதைத்தனர்.
வழக்கு வருணா போலீஸ் நிலையத்தில் இருந்து, மாண்டியா ஊரக போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சாரதம்மா உடலை புதைத்த இடத்தை, அனுஷா நேற்று மாலை அடையாளம் காண்பித்தார்.
இருட்டானதால் உடலை தோண்டியெடுக்க முடியவில்லை. இன்று தோண்ட முடிவு செய்துள்ளனர்.