ADDED : பிப் 08, 2025 09:14 PM
பீதரர்: தன் பேச்சை மதிக்காமல், வேறு ஜாதி இளைஞரை காதலித்த மகளை தந்தை அடித்துக் கொலை செய்தார். தலைமறைவான அவரை போலீசார் தேடுகின்றனர்.
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தின் பரகேன் தான்டா கிராமத்தில் வசிப்பவர் மோதிராம் ஜாதவ், 50. இவரது மகள் மோனிகா, 22. இவர் அதே கிராமத்தின் வேறு ஜாதி இளைஞரை காதலித்தார். இது மோதிராம் ஜாதவுக்கு பிடிக்கவில்லை. 'அந்நபரை காதலிக்க வேண்டாம். அவரை விட்டு விலகிவிடு. வேறு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்கிறோம்' என, மகளுக்கு அவர் புத்திமதி கூறினார். மோனிகா கேட்கவில்லை.
இதே விஷயமாக மகளுக்கும், தந்தைக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நடந்தது. மகள் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபத்தில் மோதிராம் இருந்தார்.
நேற்று காலையும், இந்த விஷயமாக மகளுடன் வாக்குவாதம் நடந்தது. மோனிகா, தன் காதலில் உறுதியாக இருந்தார். 'காதலரையே திருமணம் செய்து கொள்வேன்' என, பிடிவாதம் பிடித்தார்.
கோபமடைந்த தந்தை, உருட்டுக்கட்டையால் மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவானார். தகவலறிந்து அங்கு வந்த அவுராத் போலீசார், விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய மோதிராம் ஜாதவை தேடுகின்றனர்.

