நில முறைகேடு புகார்: சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை
நில முறைகேடு புகார்: சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை
ADDED : ஆக 19, 2024 05:43 PM

பெங்களூரு: நில முறைகேடு புகாரில் வழக்குத் தொடர அனுமதி அளித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 2022ம் ஆண்டு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. தன் மனைவிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தியதற்கு பதிலாக, இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சித்தராமையா விளக்கம் அளித்தாலும், கையகப்படுத்திய நிலத்தை விட, அதிக மதிப்பிலான மனைகளை பார்வதிக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தார். தொடர்ந்து, மைசூரை சேர்ந்த சினேகமயி கிருஷ்ணா என்ற சமூக ஆர்வலரும், முதல்வர் மீது கவர்னிடம் புகார் அளித்தார். ஊழல் தடுப்பு சட்டம் 17வது பிரிவின் கீழ், சித்தராமையாவிடம் விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார்.
கர்நாடகா கவர்னரின் உத்தரவுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும், 'வரும் 29ம் தேதி வரை கீழமை நீதிமன்றம் எந்த விசாரணையோ, உத்தரவோ பிறப்பிக்க கூடாது' எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

