ADDED : டிச 15, 2024 11:43 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல தாதா தாவுத் இப்ராஹிம். இவர், பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார். இவரது முக்கிய கூட்டாளி டேனிஷ் மெர்ச்சன்ட்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்கிரியில், தாவுத் சட்டவிரோதமாக போதை பொருள் ஆலை நடத்தி வந்ததார். அதன் மேலாளராக மெர்ச்சன்ட் பணிபுரிந்தார்.
இந்நிலையில், கடந்த நவ., 8ல் மரைன் லைன் பகுதியில் 144 கிராம் போதை பொருளுடன் முகமது அசிகுர் சஹிதுர் ரஹ்மான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டோங்கிரியை சேர்ந்த அன்சாரி என்பவர் தனக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அன்சாரியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 55 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
அப்போது அவர் தாவுத் இப்ராஹிமின் கூட்டாளி டேனிஷ் மெர்சன்ட் மற்றும் மற்றொரு கூட்டாளி காதிர் பான்டாவிடம் இருந்து போதை பொருளை பெற்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து டோங்கிரி பகுதியில் பதுங்கியிருந்த மெர்சன்டையும், பான்டாவையும் கடந்த 13ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

