தாவூத் இப்ராஹிம் கூட்டாளி கைது துபாயில் இருந்து நாடு கடத்தல்
தாவூத் இப்ராஹிம் கூட்டாளி கைது துபாயில் இருந்து நாடு கடத்தல்
ADDED : அக் 24, 2025 05:08 AM
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரை, மும்பை போலீசார் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்துள்ளனர். இவர், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த ஆண்டு, 150 கிராம் எடை உடைய எம்.டி., எனப்படும் 'மெபட்ரோன்' போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணையில், சங்கிலி மாவட்டத்தில் இயங்கி வந்த போதைப் பொருள் தயாரிக்கும் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து, 250 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த ஆலையையும் அழித்தனர்.
மும்பையின் குடிசை பகுதிகளில் இருந்து சங்கிலி மாவட்டத்தின் தொலைதுார பகுதிகள் வரை போதைப் பொருள் வலைப்பின்னல் நீண்டு இருந்ததும், சர்வதேச எல்லைகள் வழியாக ஹவாலா பணப் பரிவர்த்தனை நடந்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிக்கு வலை வீசினர். அப்போது, 641 கிராம் எம்.டி., போதைப் பொருளுடன் சிக்கிய பர்வீன் ஷேக் என்ற பெண் மூலம், இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்தன.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா தான், இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு காரணமான முக்கிய நபர் என தெரிந்தது. மேலும், சலீம் டோலாவுக்காக முகமது சலீம் என்பவர் பணியாற்றி வருவதும், இதற்காக இந்தியாவில் சஜீத் என்பவருடன் அவர் கூட்டு சேர்ந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சலீம் டோலாவையும், முகமது சலீமையும் பிடிக்க மும்பை போலீசார் தனிப்படை அமைத்தனர். நீண்ட தேடலுக்குப் பின், முகமது சலீம் துபாயில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அங்கு விரைந்த மும்பை போலீசார், அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வந்துள்ளனர்.
சலீமின் இந்திய கூட்டாளியான சஜீத் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவிக்கின்றனர். தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான சலீம் டோலாவையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

