முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்
முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்
ADDED : டிச 03, 2024 02:25 AM

புதுடில்லி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இதுவரை எவ்வித விவாதங்களும் இல்லாமல் அமளியால் முடக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இரு சபைகளிலும் விவாதிக்க, இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
பார்லிமென்ட குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவ., 25ல் துவங்கியது. அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட அமளியால், இரு சபைகளும் முடங்கின.
அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, கடந்த நவ., 26ல் நடந்த கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். இந்த நிகழ்ச்சி மட்டுமே இதுவரை நடந்துள்ளது.
பார்லிமென்ட் முட்டுக்கட்டைக்கு முடிவு காண்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் சபைத் தலைவர்களுக்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில், பார்லிமென்டை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; இது ஏற்கப்பட்டது.
இதன்படி, லோக்சபாவில், 13 மற்றும் 14ம் தேதிகளிலும், ராஜ்யசபாவில், 16 மற்றும் 17ம் தேதிகளிலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார். இதையடுத்து, நீண்ட முடக்கங்களுக்குப் பின், பார்லிமென்டில் விவாதம் நடக்க உள்ளது.