ADDED : ஆக 29, 2025 12:41 AM

பால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், விரார் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப் பில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் ஒரு வயது சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது.
அப்போது திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்தது. இதில் 12 குடியிருப்புகள் சரிந்து அருகேயுள்ள காலி குடியிருப்பில் விழுந்தது. இந்த விபத்தில் குடியிருப்புவாசிகள், விருந்தினர்கள் என, 15 பேர் பலியாகினர்; ஆறு பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் வரை இறந்தவர்களில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மேலும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த மீட்புப்பணிகளின்போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மேலும் இருவர் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால், பலி 17 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து வசாய் - விரார் மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் படி, பில்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த கட்டடத்தில் குடியிருந்த மற்ற குடும்பத்தினர், அருகேயுள்ள கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

