ADDED : அக் 24, 2024 12:50 AM
பாபுசாப்பாளையா,
பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், மேலும் 5 பேர் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரின் கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில், ஆந்திராவை சேர்ந்த முனிராஜ் ரெட்டி என்பவர், ஏழு மாடி கட்டடம் கட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், அந்த கட்டடம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொக்லைன் இயந்திரம் வாயிலாக கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது.
இடிபாடுகளில் சிக்கி இறந்த பீஹார் மாநிலத்தின் ஹார்மன், 26, டிரிபால், 35, முகமது சாகில், 19, ஆகியோரின், உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 14க்கும் மேற்பட்டவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் மீட்புப் பணி, நேற்று முன்தினம் இரவு முழுதும் நடந்தது.
துணை முதல்வர் சிவகுமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மாநகராட்சி அதிகாரிகள், ஒயிட்பீல்டு டி.சி.பி., தேவராஜிடம் இருந்து தகவலை பெற்றுக் கொண்டார்.
சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதால், மோப்ப நாய் உதவியுடன் சிக்கியவர்களை தேடும் பணி நடந்தது. நேற்று காலை பெங்களூரைச் சேர்ந்த சத்யராஜ், 25, சங்கர் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் நேற்று மாலை, மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் பெயர் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணி தொடர்கிறது.
ஹென்னுார் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நான்கு மாடிக்கட்டடம் கட்ட மட்டுமே, மாநகராட்சியிடம் முனிராஜ் ரெட்டி அனுமதி வாங்கியதும், ஆனால் ஏழு மாடிக்கட்டடம் கட்டியதும் தெரிந்தது. இதை மாநகராட்சி அதிகாரிகளும் கவனிக்கவில்லை.
முனிராஜ் ரெட்டி, கட்டட இன்ஜினியர் உட்பட சிலர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்கு பதிய வேண்டும் என, பாபுசாப்பாளையா மக்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

