UPDATED : நவ 13, 2026 05:58 PM
ADDED : நவ 13, 2026 05:54 PM
டில்லி மாநகர போலீசின் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் சச்சின் குமார் சிங்கால், தலைமையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார், சோனிபட் மற்றும் பஹதூர்கர் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய காற்று தர மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்துவது மற்றும் காலாவதியான வாகனங்கள் டில்லிக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
காலாவதியான வாகனங்களை தடுத்து, திருப்பி அனுப்புவதற்கு இதில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, எல்லைகள், மாற்றுப் பாதைகள் மற்றும் நுழைவுச் சாலைகளில் போதுமான போலீசாரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுகளின்படி, வாகனங்களின் புகை கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை தீவிரப்படுத்தவும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வெளிமாநில பஸ்கள், டில்லிக்குள் நுழைவதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முடிந்தவரை, இதுபோன்ற பஸ்களை, அவை புறப்படும் இடங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.
மேலும், காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, வாகனங்கள் திருப்பி விடப்படும் இடங்களில் டிஜிட்டல் திரைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திரையில், வாகன கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், எல்லைகளில் பொது அறிவிப்பு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
