ADDED : டிச 27, 2024 05:40 AM

பெங்களூரு: ''பொங்கலுக்கு பின் பால் விலையை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என்று, கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக் கூறினார்.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில், நந்தினி பாக்கெட் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூனில், பால் விலை லிட்டருக்கு, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கு பின்பும், பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த வேண்டும் என்று, பால் உற்பத்தி விவசாயிகள் சங்கத்திடம் இருந்து, கே.எம்.எப்.,புக்கு தொடர்ந்து கோரிக்கை வந்தது.
சென்னப்பட்டணாவில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, பால் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்படலாம் என்று முதல்வர் சித்தராமையாவே கூறி இருந்தார்.
இந்நிலையில், கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக் நேற்று அளித்த பேட்டியில், ''பால் விலையை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்த வேண்டும் என்று, விவசாயிகளிடம் இருந்து எங்களுக்கு தொடர்ந்து கோரிக்கை வருகிறது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஏற்கனவே ஒரு முறை கூட்டம் நடத்தி உள்ளோம்.
''பொங்கலுக்கு பின், மீண்டும் ஒருமுறை முதல்வருடன் ஆலோசனை நடத்துவோம். அப்போது பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இப்போது 550 மி.லி., பால் விற்பனை செய்கிறோம். மீண்டும் 500 மி.லி., விற்பனை செய்யவும் யோசித்து வருகிறோம். இதுபற்றியும் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
முதல்வர் ஒப்புதல் அளித்தால், பொங்கல் பரிசாக பால் விலை உயர்வு அதிர்ச்சியை மக்களுக்கு அரசு வழங்க போவது உறுதி.

