சட்டங்களுக்கு அடிபணிய மறுக்கும் 'எக்ஸ்'; ஐகோர்ட் உத்தரவை எதிர்க்க முடிவு
சட்டங்களுக்கு அடிபணிய மறுக்கும் 'எக்ஸ்'; ஐகோர்ட் உத்தரவை எதிர்க்க முடிவு
ADDED : செப் 30, 2025 03:21 AM

பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பேச்சுரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக 'எக்ஸ்' சமூக வலைதள நிர்வாகம் அறிவித்துள்ளது.
'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்திஇருந்தது.
சமூக வலைதளம் இதனை எதிர்த்து 'எக்ஸ்' சமூக வலைதளம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கண்காணிப்பு இல்லாமல் சமூக வலைதளங்கள் நம் நாட்டிற்குள் இயங்குவதை அனுமதிக்க முடியாது' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
நம் நாட்டுக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாமல் இயங்குவதற்கு அனுமதி தர முடியாது. நம் நாட்டில் சேவையை தொடர விரும்பும் சமூக வலைதள நிறுவனங்கள் இதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தியாவின் சட்டத்திட்டங்களை, 'எக்ஸ்' சமூக வலைதளம் மதிக்க வேண்டும்.
பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டும் தான். வெளிநாட்டினருக்கு அதற்கான, 19வது பிரிவு பொருந்தாது.
அமெரிக்க சட்டங்களை மதித்து நடக்கும், 'எக்ஸ்' சமூக வலைதளம் இந்திய சட்டங்களுக்கு இணங்கி நடக்க முடியாதா? சமூக ஊடகங்கள் மூலம் எழும் அச்சுறுத்தல்கள் ஒடுக்கப்பட வேண்டும். அதை ஒழுங்குப்படுத்துவதும் அவசியம்.
எச்சரிக்கை
தொழில்நுட்பம் வளரும்போது கட்டுப்பாடுகளும் தேவை. எனவே, இந்திய மண்ணில் எந்தவொரு சமூக வலைதளத்திற்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. இந்திய சந்தைகளை விளையாட்டு மைதானமாக கருதுவதை ஏற்க முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்நி லையில், 'கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த கவலை அளிக்கிறது' என, 'எக்ஸ்' சமூக வலைதள நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'ஏராளமான போலீஸ் அதிகாரிகள் தனிச்சையாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவதற்கு , உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வழி வகுக்கும்.
தவிர பேச்சுரிமை சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்' என, 'எக்ஸ்' சமூக வலைதள நிர் வாகம் கூறியுள்ளது.