நோய்வாய்ப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க முடிவு?
நோய்வாய்ப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க முடிவு?
UPDATED : ஜூலை 16, 2026 09:59 PM
ADDED : ஜூலை 16, 2026 09:53 PM

-டில்லி சிறப்பு நிருபர்-
முதியோர் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மூன்று மாதங்களில் கொள்கை வகுக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உடல்நிலை குன்றியவர்கள் மற்றும் 70 வயதைக் கடந்த முதிய கைதிகளைக் கருணை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முதியோர் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் தங்கள் இறுதி நாட்களை சிறையிலேயே கழிப்பதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, தகுதியான கைதிகளை அடையாளம் காண வேண்டும்.
அதன் பின் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். இதற்கான விரிவான கொள்கையை அனைத்து மாநிலங்களும் மூன்று மாதங்களுக்குள் வகுக்க வேண்டும். 'தீராத நோய்' என்பதற்கான தெளிவான வரையறையை வகுக்க வேண்டும்.
கைதிகளின் உடல்நிலை மற்றும் நோயின் தீவிரத்தைக் கண்டறிந்து சான்றளிக்க மாநில மற்றும் மண்டல அளவில் சுதந்திரமான மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், பரிசீலித்தல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற அத்தனை நடைமுறைகளும் காலவரம்புக்கு உட்பட்டும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். தேவையற்ற காலதாமதத்தால் கைதிகள் சிறையிலேயே உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்.
இந்த புதிய கொள்கையானது விசாரணைக் கைதிகள் மறுஆய்வுக் குழுக்களின் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இக்குழுக்கள் முதியோர் மற்றும் உடல்நலம் குன்றிய கைதிகளுக்கு ஜாமின், பரோல் அல்லது தண்டனைக் குறைப்பு வழங்க அவ்வப்போது பரிந்துரைக்க வேண்டும்.
இந்தச் செயல்முறையின் மற்றொரு முக்கிய அம்சமாக, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முதல் மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் இறுதி முடிவு வரை அனைத்தும், 'இ- - பிரிசன்ஸ்' இணையதளத்தில் முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும், காலவரம்பிற்குள் பணிகளை முடிப்பதற்கான தானியங்கி எச்சரிக்கைகளும் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாநில அரசுகள் இந்த உத்தரவுகளை முறையாகச் செயல்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 2027, ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
