ADDED : ஜன 17, 2024 12:44 AM

பெங்களூரு : பயன்படுத்தப்படாமல் வீணாக உள்ள, பீன்யாவின் பசவேஸ்வரா பஸ் நிலையத்தை ஷாப்பிங் மால், திருமண மண்டபம், மருத்துவமனையாக மாற்றி, தனியாருக்கு வாடகைக்கு அளிக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையத்துக்கு, தினமும் பல ஆயிரக்கணக்கான பயணியர் வருகின்றனர். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தின் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், பீன்யாவில் பசவேஸ்வரா பஸ் நிலையம் கட்டப்பட்டது. வட மாவட்டங்கள் உட்பட, கர்நாடகாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பீன்யா பஸ் நிலையத்துக்கு, சரியான போக்குவரத்து இணைப்பு இல்லாததாலும், நகரில் இருந்து தொலைவில் இருப்பதாலும், பயணியர் வர தயங்குகின்றனர். எனவே இங்கிருந்து பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டது. 2014ல், 46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பஸ் நிலைய கட்டடம் வீணாக உள்ளது.
மொத்தம் 87,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட பஸ் நிலையம், நான்கு மாடிகள் கொண்டதாகும். இங்கு ஷப்பிங் மால், மருத்துவமனை, திருமண மண்டபம் அல்லது பள்ளி திறக்க முன்வரும் தனியாருக்கு, வாடகைக்கு விட கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
பஸ்கள் நிறுத்தும் இடங்களில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் கார்கோ லாரிகள் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உட்புற கட்டடம் தனியாருக்கு வாடகைக்கு விடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

