ஜம்பு சவாரி ஊர்வலத்திற்கு தயாராகும் அலங்கார ஊர்திகள்
ஜம்பு சவாரி ஊர்வலத்திற்கு தயாராகும் அலங்கார ஊர்திகள்
ADDED : அக் 09, 2024 04:14 AM
மைசூரு : ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக, மைசூரில் அலங்கார ஊர்திகள் தயாராகி வருகின்றன.
மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியாக, ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து செல்லும்.
அந்த யானையை பின்தொடர்ந்து, மேலும் 13 யானைகள் ஊர்வலமாக செல்லும். யானைகளுக்கு பின் குதிரைகள், அலங்கார ஊர்திகள் அணிவகுக்கும். வரும் 12ம் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்க இருக்கிறது.
அலங்கார ஊர்திகள் ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர் பிரசாந்த் நேற்று கூறியதாவது:
தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 50 அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. மாநிலத்தின் 31 மாவட்டங்களில் இருந்து 31 ஊர்திகள், அரசு துறைகளின் சார்பில் 19 ஊர்திகள் இடம்பெறும்.
ஊர்திகளை அலங்கரிக்கும் பணி, பண்டிபாளையா ஏ.பி.எம்.சி., வளாகத்தில் நடந்து வருகிறது.
இதுவரை 19 ஊர்திகள் தயாராகி உள்ளன.
மீதம் உள்ள ஊர்திகளும் ஆயுத பூஜை அன்று முடிக்கப்படும். அன்று இரவு மைசூரு அரண்மனைக்கு கொண்டு வரப்படும்.
மறைந்த அர்ஜுனா யானையின் உருவப்படத்துடன் செல்லும் ஊர்தி, அரசின் சாதனைகள் தொடர்பான ஊர்திகள் இடம்பெறும். பார்வையாளர்களை கவரும், முதல் மூன்று ஊர்திகளுக்கு பரிசு வழங்கப்படும். நான்காவது இடம் பிடிக்கும் ஊர்திக்கு, ஆறுதல் பரிசு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.