ADDED : ஜன 27, 2025 10:17 PM

-- நமது நிருபர் --
ராமரின் பக்தர், சுக்ரீவனின் நண்பர், வாயுபுத்திரன் என்று அறியப்படுபவர் ஹனுமன். பலத்திலும் சிறந்தவராக அறியப்படுகிறார். இலங்கையில் இருந்து சீதையை மீட்டு வர ராமருக்கு பெரும் உதவி புரிந்ததால், ராமர் கோவில் இருக்கும் இடங்களில் எல்லாம் ஹனுமனுக்கும் இடம் உண்டு.
சில ஊர்களில் ஹனுமனுக்கு தனி கோவில்களும் உள்ளன. அதில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உள்ளது. இதுபோன்று வரலாறு கொண்ட ஹனுமன் கோவிலை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ளது விஜயநகர். இங்கு உள்ள சித்தேஸ்வரன் நகர் பி.எப்., லே - அவுட்டில் ஸ்ரீ மாருதி மந்திர் எனும் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோவிலுக்கு திகாலி ஆஞ்சநேயர் கோவில் என்ற பெயர் முன்பு இருந்தது. காலி என்றால் முன்பு ஒரு காலத்தில் பேய் அல்லது தீய ஆவி என்று பொருள்படும். மக்கள் தங்கள் வீடு அல்லது குடும்பங்களில் நடக்கும் தீய சம்பவங்களில் இருந்து விடுபட இங்கு வந்து ஹனுமனை வழிபட்டால் பிரச்னை தீர்ந்து போகும் என்று நம்பப்படுகிறது.
திகாலி ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்ட கோவில் நாளடைவில் கோத்தி பந்தே என்று அழைக்கப்பட்டது.
அதன்பின் மாருதி மந்திர் என்று மாறியது. இந்த கோவிலில் தற்போது கோதண்டராமசாமி, சனி மகாத்மா, கணபதி, ஆதிசுஞ்சனகிரி கோவில்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் கொண்டாடப்படும் ஹனுமன் ஜெயந்தி பிரசித்திபெற்றது.
இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் மன அமைதி கிடைக்கிறது என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து விஜயநகருக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவையும் உள்ளது.

