ஆழமாக வேரூன்றிய இந்தியா-அமீரக நட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!
ஆழமாக வேரூன்றிய இந்தியா-அமீரக நட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!
ADDED : ஏப் 08, 2025 05:17 PM

புதுடில்லி: 'இந்தியா -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான நட்பு ஆழமாக வேரூன்றியது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக அமீரகம் உள்ளது. அமீரகத்தின் துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவர் இன்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மையை முன்னேற்றுவதில் துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு ஆழமாக வேரூன்றியது. துபாய் பட்டத்து இளவரசர் வருகை எதிர்காலத்தில் இன்னும் உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சந்திப்பு குறித்து துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் கூறியதாவது: புது டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களது சந்திப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா இடையே உறவுகளின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தின. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.