ஜெயலலிதா நகைகளுக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் தீபா மனு
ஜெயலலிதா நகைகளுக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் தீபா மனு
ADDED : பிப் 07, 2025 10:30 PM
புதுடில்லி:சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்டவற்றை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, அவரது அண்ணன் மகள் தீபா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், 2014ல் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பின் உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கின் விசாரணையின் போதே, ஜெயலலிதா உயிர் இழந்தார். இதனால், ஜெயலலிதாவை விடுத்து, சசிகலா உள்ளிட்ட மற்றவர்களை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
முன்னதாக புலன் விசாரணையின் போது விசாரணை அமைப்புகள், ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த கை கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தன. இவை அனைத்தும் கர்நாடகா அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மறைந்த ஜெயலலிதாவின் வாரிசு என்ற முறையில், கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்ட சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. நகைகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டன.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தீபா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தீபா தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா என்னுடைய அத்தை; வாரிசு என்ற அடிப்படையில் தான், அவருடைய நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை நானும் சகோதரன் தீபக்கும் கேட்கிறோம். அதற்கான உரிமையை பறிக்கும் வகையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஆகியவை தீர்ப்பு வழங்கி உள்ளன. அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த நகைகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் உத்தரவையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.