அகிலேஷ் மனைவி குறித்து அவதுாறு: மத குருவுக்கு 'பளார்'
அகிலேஷ் மனைவி குறித்து அவதுாறு: மத குருவுக்கு 'பளார்'
ADDED : ஆக 01, 2025 12:01 AM

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான டிம்பிள் யாதவ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த முஸ்லிம் மத குரு மவுலானா சஜித் ரஷீதை, 'டிவி' விவாத நிகழ்ச்சிக்கு பின், அக்கட்சியின் நிர்வாகிகள் கன்னத்தில் அறைந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ், லோக்சபா எம்.பி.,யாக உள்ளார்.
சமீபத்தில், பார்லி., அருகே உள்ள மசூதிக்கு டிம்பிள் யாதவ் சென்றார். இது பற்றி, 'டிவி' விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த முஸ்லிம் மதகுருவான மவுலானா சஜித் ரஷீத், டிம்பிள் யாதவின் ஆடையை விமர்சித்து அவதுாறான கருத்துகளை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சமாஜ்வாதி நிர்வாகிகள், அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். ஆனால் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில், உ.பி.,யின் நொய்டாவில் உள்ள தனியார், 'டிவி' சேனலில், விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க மவுலானா சஜித் ரஷீத் வந்திருப்பதாக சமாஜ்வாதி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்ற அக்கட்சி நிர்வாகிகள், விவாத நிகழ்ச்சி முடிந்த பின் வந்த மவுலானா சஜித் ரஷீதிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவரது கன்னத்தில் சமாஜ்வாதி நிர்வாகிகள் திடீரென பலமுறை அறைந்தனர். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சமாஜ்வாதி நிர்வாகிகள் மோஹித் நாகர், ஷியாம் சிங் பாட்டி, பிரசாந்த் பாட்டி ஆகியோர், சஜித் ரஷீதை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
“அகிலேஷ், டிம்பிள் யாதவ் ஆகியோர் மன்னிப்பு கேட்கும் வரை, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்,” என, சஜித் ரஷீத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.