முதல்வர் நியமனத்தில் தாமதம் பா.ஜ.,வில் உட்கட்சி பூசல்?
முதல்வர் நியமனத்தில் தாமதம் பா.ஜ.,வில் உட்கட்சி பூசல்?
ADDED : பிப் 12, 2025 10:26 PM
விக்ரம்நகர்:பா.ஜ.,வில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, முதல்வர் யார் என்று அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் வெளியிட்ட அறிக்கை:
முதல்வரை தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.,வில் கோஷ்டி பூசல் நிலவுகிறது. உட்கட்சிப் பூசல் காரணமாக, அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது அரசு நிர்வாகத்தைப் பாதிக்கிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், பா.ஜ.,வால் இன்னும் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. பா.ஜ.,வின் செயலற்ற தன்மை காரணமாக நகரின் பல பகுதிகளில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. மக்கள் நீண்டகால மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள். பா.ஜ.,வின் உட்கட்சி பூசல், மக்களை ஏன் பாதிக்க வேண்டும்?
சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்து கட்சி உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனையில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது. எங்கே தவறு நேர்ந்தது என்பது குறித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மதிப்பாய்வு செய்து வருகிறார்.
பஞ்சாப் தலைவர்கள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களை சந்தித்து, அவர கருத்துக்களைச் சேகரித்து, எங்கள் அணுகுமுறையை மேம்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

