ஹனுமன் கொடியேற்ற அனுமதிக்கு தாமதம் போராட்டத்துக்கு தயாராகும் இளைஞர்கள்
ஹனுமன் கொடியேற்ற அனுமதிக்கு தாமதம் போராட்டத்துக்கு தயாராகும் இளைஞர்கள்
ADDED : பிப் 04, 2024 11:07 PM
பெலகாவி: மாண்டியா, கெரேகோடுவில் ஹனுமன் உருவம் பொறித்த கொடி அகற்றப்பட்டது. இதனால் அரசை கண்டித்து ஹிந்து அமைப்பினர், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், பெலகாவியில் ஹனுமன் கொடி ஏற்ற அனுமதி அளிப்பதற்கு, பட்டண பஞ்சாயத்து தாமதம் செய்வதை கண்டித்து, போராட்டத்திற்கு இளைஞர்கள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
பெலகாவியின் கித்துார் அருகே உள்ளது எம்.கே.ஹுப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஹனுமன் கோவில் இருந்தது. அந்த கோவிலை இடித்து, கிராம மக்கள் புதிய கோவிலை கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோவிலின் முன்பு, கொடி கம்பம் அமைத்து அதில், ஹனுமன் கொடியை பறக்கவிட அனுமதி அளிக்கும்படி, பட்டண பஞ்சாயத்திடம், கிராம இளைஞர்கள் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை பட்டண பஞ்சாயத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்நிலையில், பட்டண பஞ்சாயத்து அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த, சமூக வலைதளங்கள் மூலம், கிராம இளைஞர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்று காலை எம்.கே.ஹுப்பள்ளி கிராமத்திற்கு, பெலகாவி எஸ்.பி., பீமாசங்கர் குலேத் சென்றார். கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டார்.
பின் அவர் கூறுகையில், 'புதிதாக கட்டப்பட்டு வரும் ஹனுமன் கோவில் முன்பு, கொடி கம்பம் அமைத்து ஹனுமன் கொடி ஏற்ற, கிராம மக்கள் அனுமதி கேட்டு உள்ளனர். முடிவு எடுக்க வேண்டியது பட்டண பஞ்சாயத்து.
போராட்டம் நடத்துவதால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், போராட்டத்திற்கு தடை விதித்து உள்ளோம். இங்கு பிரச்னை ஏற்பட சமூக வலைத்தள பதிவுகளே காரணம். இளைஞர்கள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும்' என்றார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எம்.கே.ஹுப்பள்ளி கிராமத்தில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

