ஒப்பந்ததாரர் புகார் காரணமாக நீர்மூழ்கி கப்பல் பணியில் தாமதம்
ஒப்பந்ததாரர் புகார் காரணமாக நீர்மூழ்கி கப்பல் பணியில் தாமதம்
ADDED : டிச 14, 2024 02:40 AM

புதுடில்லி: கடல் பரிசோதனைக்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உட்பட பல்வேறு புகார்களை ஒப்பந்ததாரர் தெரிவித்ததை அடுத்து, 50,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருந்த நீர்மூழ்கி கப்பல் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியது. இதை தொடர்ந்து, ராணுவ தளவாட ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த புதிய கொள்கையின்படி, உள்நாட்டு நிறுவனத்துடன், வெளிநட்டு ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனம் கூட்டு சேர்ந்து, அந்த தொழில்நுட்பங்களை நம் நாட்டு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் நம் நாட்டிலேயே ராணுவ தளவாட உற்பத்தி செய்யப்படும்.
அந்த வகையில், 50,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு டீசல் - எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை கட்ட நம் ராணுவ அமைச்சகம் முடிவு செய்தது.
இதற்காக, ஜெர்மன் நாட்டை சேர்ந்த, 'தைசன்குரூப் மரைன் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனம் நம் அரசுக்கு சொந்தமான, 'மாசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது.
இந்த நிறுவனங்களிடம் இருந்து ஏல அடிப்படையில் ஒப்பந்தத்தை பெற, நம் நாட்டின், 'எல் அண்ட் டி' மற்றும் ஸ்பெயின் நாட்டின் நவான்டியா நிறுவனத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த ஏலத்தை இறுதி செய்வதற்கான பணியை ராணுவ அமைச்சகம் செய்து வருகிறது. இரண்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப திறன்களை பரிசோதித்து வருகிறது.
இந்த நேரத்தில், கடல் பரிசோதனையில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என, ஒப்பந்தம் கோரிய நிறுவனங்களில் ஒன்று புகார் தெரிவித்துஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புகாரின் தன்மை மற்றும் அது கூறப்படும் நேரத்தை வைத்து பார்க்கும்போது, ஒப்பந்தம் கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்த புகார் கூறப்படுவதாகவும் சிலர் கருதுகின்றனர்.
கள சோதனைகள் நடந்து வரும் நேரத்தில் இது குறித்து கருத்து கூற எல் அண்ட் டி நிறுவனம் மறுத்துவிட்டது.
இந்த திடீர் புகார் காரணமாக, கப்பல் கட்டும் பணி ஓராண்டுக்கு மேல் தாமதமாகும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், இரண்டு ஒப்பந்த நிறுவனங்களின் பரிந்துரைகளையும் ஆராய, கமிட்டி ஒன்றை ராணுவ அமைச்கம் அமைத்துள்ளது. அவர்கள் ஆய்வு செய்து இறுதி முடிவை அரசுக்கு பரிந்துரைப்பர் என கூறப்படுகிறது.