டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: கார்கள், கட்டுமான பணிக்கு தடை
டில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: கார்கள், கட்டுமான பணிக்கு தடை
ADDED : ஜன 15, 2024 12:28 AM

புதுடில்லி: புதுடில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்ததன் எதிரொலியாக அத்தியாவசியமற்ற கட்டுமான பணிகள், காற்று மாசு ஏற்படுத்தக்கூடிய நான்கு சக்கர வாகனங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, குளிர்காலத்தில், காற்று மாசின் அளவு, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பருவநிலை மாறுபாடு பிரச்னையுடன், வாகனங்கள் வெளியிடும் புகை, அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது, உச்சத்தில் இருக்கும் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை, புதுடில்லியின் காற்று மாசை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட காற்றின் தரத்தை மேம்படுத்தும் கமிஷன் நேற்று காற்றின் தரத்தை ஆய்வு செய்தது.
இதில் நேற்று காலை 10:00 மணி மற்றும் 11:00 மணிக்கு காற்றின் தரம் முறையே 458, 457 குறியீடுகளாக பதிவாகி இருந்தன. இவை, காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை எடுத்துக்காட்டின.
காற்றின் தரத்தை மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்கில், மேம்படுத்தப்பட்ட செயலாக்க திட்டத்தை உடனே அமல்படுத்த இந்த கமிஷன் முடிவு செய்தது. இதன்படி, புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் அத்தியாவசியமற்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.
இதேபோல் காற்று மாசை அதிகரிக்கச் செய்யும் பி.எஸ்., எனப்படும் பாரத் ஸ்டேஜ் 3 ரக பெட்ரோல் மற்றும் 4 ரக டீசல் வகை கார்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
குளிர்காலங்களில் புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இவ்வாறு காற்றின் தரம் மிகவும் மோசமடையும்போதும், இவற்றை கட்டுப்படுத்தவும் இது போன்ற தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.