டில்லி காற்று மாசு கட்டுப்பாடுகள் தொடரும்; நேரடி வகுப்பு குறித்து முடிவு செய்ய உத்தரவு
டில்லி காற்று மாசு கட்டுப்பாடுகள் தொடரும்; நேரடி வகுப்பு குறித்து முடிவு செய்ய உத்தரவு
ADDED : நவ 26, 2024 01:03 AM

புதுடில்லி: காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் டில்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதே நேரத்தில், 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
முன் அனுமதி
டில்லியில், குளிர்காலத்தில் காற்று மாசு பிரச்னை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காற்றின் தரம் குறையும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
கடந்த வாரங்களில் காற்று தரக் குறியீடு, 450 என்ற அளவைத் தாண்டியது. இதையடுத்து, ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும் காற்று மாசு கட்டுப்பாடுகளின் நான்காம் நிலை அமல்படுத்தப்பட்டது.
இதன்படி, பள்ளிகள் மூடப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் டிரக்குகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கட்டுமானங்களுக்கு தடை உட்பட பல கட்டுப்பாடுகள் உள்ளன.
டில்லி காற்று மாசு பிரச்னை தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது, தன் முன் அனுமதி பெறாமல், கட்டுப்பாடுகளை குறைக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
டில்லியில் காற்று மாசின் வீரியம் சற்று குறைந்தாலும், மிகவும் தீவிரம் என்ற அளவிலேயே உள்ளது. அதனால், ஜி.ஆர்.ஏ.பி., நான்கு நிலை கட்டுப்பாடுகள் தொடரும்.
உரிய நடவடிக்கை
அதே நேரத்தில், 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து, மத்திய அரசின் காற்று தர நிர்வாக கமிஷன் ஆய்வு செய்யலாம். வகுப்புகள் நடத்தப்படாததால், மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்கவில்லை.
மேலும், பெரும்பாலானோர் வீடுகளில் காற்று சுத்திகரிப்பான் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், இந்த மாணவர்களுக்கு வகுப்புகளை நேரடியாக நடத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டுப்பாடுகளின் நான்காம் நிலை அமலில் இருந்தாலும், அது முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்று, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிப்பதை, டில்லி போலீஸ் உறுதி செய்ய வேண்டும். மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.