டில்லி காற்று மாசுபாடு; மத்திய, மாநில அரசுகள் மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்
டில்லி காற்று மாசுபாடு; மத்திய, மாநில அரசுகள் மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்
ADDED : அக் 23, 2024 03:34 PM

புதுடில்லி: டில்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தலைநகர் டில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாட்டில் தலைநகரே ஸ்தம்பித்து கிடக்கிறது.
இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் உமிகளை விவசாயிகள் எரிப்பது தான். எனவே, இதனை தடுக்க பெயரளவு நடவடிக்கைகளை மட்டுமே இரு மாநில அரசுகளும் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மரக்கட்டைகளை எரிப்பவர்களுக்கும், அதை மீறுபவர்களுக்கும் ஏன் பெயரளவு அபராதம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், காற்று மாசுபாட்டை தடுக்கும் சட்டத்திற்கு பல்லை பிடுங்கிய நிலை தான் இருந்து வருவதாகவும், மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களை தண்டிப்பதற்கு பதிலாக அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான ஐஸ்வர்யா பாட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் (விவசாயம்), ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 10 நாட்களுக்குள் சட்டதிருத்த விதிகளை முழுவதுமாக அமல்படுத்துவோம், என உறுதியளித்தார்.