ADDED : மார் 18, 2025 03:09 AM
புதுடில்லி; டில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ராணுவ விமான தளத்தில் இருந்து பயணியர் விமானங்களை இயக்க அனுமதி அளித்த அரசுக்கு எதிராக, ஜி.எம்.ஆர்., நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாட்டின் மிக பரபரப்பான விமான நிலையங்களில், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முதன்மையானது. 'ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை நிர்வகித்து வருகிறது.
கடந்த ஆண்டு, 7.36 கோடி பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். இருப்பினும், 183 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, ஜி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.
டில்லி அருகே உள்ள காஜியாபாத் ராணுவ விமான தளத்தில் இருந்து பயணியர் விமானங்கள் இயக்கப்படுவதால், டில்லி விமான நிலையத்தை இயக்குவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என, ஜி.எம்.ஆர்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், பயணியர் தேவை இருந்தால் ஒழிய, ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ., தொலைவுக்குள் மற்றொரு விமான நிலையம் இயக்க கூடாது என்ற விதியை அரசு மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.