டில்லியில் அடர்ந்த பனி, கடும் குளிர்; பயணிகள் கவனத்திற்கு...!; விமான நிலையம் அறிவிப்பு
டில்லியில் அடர்ந்த பனி, கடும் குளிர்; பயணிகள் கவனத்திற்கு...!; விமான நிலையம் அறிவிப்பு
ADDED : டிச 25, 2024 07:50 AM

புதுடில்லி: 'டில்லியில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக, விமான சேவைகள் பாதிக்கப்படலாம். தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசிய பிறகு, பயணங்களை திட்டமிட வேண்டும்' என டில்லி விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
டிசம்பர் மாதம் வந்தாலே, வட மாநிலங்களில் கடும் குளிர் வந்து விடும். அதன்படி வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகரிக்க துவங்கி விடுகிறது. டில்லியில் இன்று வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால் அடர்த்தியான பனி மூட்டம் பல்வேறு பகுதிகளை மூடியது. அடந்த பனி மூட்டம் காரணமாக, வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சாலையில் மக்கள் செல்கின்றனர்.
இந்நிலையில், 'டில்லியில் பனிமூட்டம் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. விமான சேவைகள் பாதிக்கப்படலாம்' என டில்லி விமான நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில், டில்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடும் பனிமூட்டம் காரணமாக டில்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்களின் நேரத்தில் மாற்றம் இருக்கலாம். பனிமூட்டம் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நிலவரத்தை அறிந்து கொண்ட பிறகு, பயணங்களை திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.